
ஆதவன் 21.3.1942இல் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக் குறிச்சியில் பிறந்தார். இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். சிறிது காலம் ரயில்வேயில் பணியாற்றிய ஆதவன் 1975ஆம் ஆண்டு தில்லியில் நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் துணை ஆசிரியராக சேர்ந்தார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். மரணத்திற்குப் பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது அவரது ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டது. ஆதவனின் ‘என் பெயர் ராமசேஷன்’ நாவல் வித்தாலி ஃபூர்ணிகா அவர்களால் ருஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாயின.மனைவி : ஹேமலதா சுந்தரம், மகள்கள் : சாருமதி, நீரஜா. பெங்களூரில் வசிக்கின்றனர். குழந்தைகளுக்காக ஆதவன் ‘சிங்க ராஜகுமாரி’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘கானகத்தின் நடுவே’ என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். ஆதவனின் நூல்கள், இரவுக்கு முன்பு வருவது மாலை (குறுநாவல்கள், 1974), கனவுக்குமிழிகள் (சிறுகதைகள், 1975), கால் வலி (சிறுகதைகள், 1975), காகித மலர்கள் (நாவல், 1977), என் பெயர் ராமசேஷன் (நாவல், 1980), ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் (சிறுகதைகள், 1980), புதுமைப்பித்தனின் துரோகம் (சிறுகதைகள், 1981), பெண் தோழி தலைவி (குறுநாவல், 1982), முதலில் இரவு வரும் (சிறுகதைகள், 1985), புழுதியில் வீணை (நாடகம், 1998), ஆதவன் சிறுகதைகள் (தொகுப்பு : இந்திரா பார்த்தசாரதி, 1992).